January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவது தாமதமாகுவதன் பின்னணியில் வியாபார நடவடிக்கை’

வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம் தாமதமாகுவதன் பின்னணியில் வியாபார நடவடிக்கைகள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அருன்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணியை ஒரு சில குழுவினர் வியாபாரமாக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சீனாவின் வூஹான் நகருக்கு விசேட விமானமொன்றை அனுப்பி, அங்கிருந்தவர்களை அழைத்து வந்ததில் இருந்தே, இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணி ஆரம்பமாகியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டுக்கு அழைத்து வரப்படுவோரின் பட்டியலில் பெயரை இணைத்துக்கொள்வதில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கை வரை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளோரிடம் இருந்து பணம் பெறும் நிலை உறுவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர பெரும் பங்காற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இவ்வாறான துன்பங்களுக்கு முகங்கொடுப்பதை அங்கீகரிக்க முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு வீடுகளில் அல்லது பிரதேச ரீதியான இலவச தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.