இலங்கையர்களுக்கு எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் கொவிட் 19 வைரஸிற்கான முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க முடியும் என ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இறுதி கட்டத்தினை அடைந்துள்ளதாகவும், தடுப்பூசி விநியோகிக்கப்படும் நடைமுறை ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மாதத்தின் இறுதியிலோ, மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ தடுப்பூசியைப் பெறமுடியும் எனவும் ஏப்ரல் மாதத்திற்குள் தடுப்பூசியை மக்களுக்கு நிச்சயமாக வழங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கமைய 155,000 சுகாதார ஊழியர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 127,500 முப்படை மற்றும் பொலிஸாருக்கும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக திறைசேரி தேவையான நிதியை திரட்டியுள்ளதுடன், தடுப்பூசிக்கான நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.