November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

யாழ்.பல்கலைக்கழகத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மாலை முடிவுக்கு வந்துள்ளது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட கலைப்பீட மாணவர்கள் தங்கள் மீதான தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று காலை முதல் பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்பாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்பு உள்நுழைவுத் தடை மனிதாபிமான அடிப்படையில் விலக்கிக்கொள்ளப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நேற்று அறிவித்திருந்தார்.

எனினும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளில் இருந்து தாம் நிபந்தனையற்ற முறையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் இன்றும் தமது உணவு விடுப்பு போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதையடுத்து இன்று மாலை மாணவர்களை சந்தித்த துணைவேந்தர் போராட்டத்தைக் கைவிடுமாறு மாணவர்களிடம் விநயமாகக் கேட்டுக் கொண்டார்.

வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைத் திறவு கோலாகப் பயன்படுத்தி மாணவர்கள் தமது நன்னடத்தை மூலம், பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் நல்லெண்ணத்தை வெல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டத்தைக் கைவிடுவதற்கு மாணவர்கள் முன் வந்துள்ளனர்.