July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றிலிருந்து 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைவு: இலங்கையின் இன்றைய நிலவரம்

Photo: Twitter/ Srilanka Red cross

இலங்கையில் இன்றைய தினத்தில் 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 45,721 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களில் 445 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,372 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று 2 உயிரிழப்புக்கள் பதிவு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்தாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பதிவாகிய உயிரிழப்புகளுக்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 217 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பில் முகக்கவசம் அணியாதவர்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா

சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக முகக்கவசம் அணியாதவர்களை ‘அன்டிஜன்’ பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு நகரில் முகக்கவசம் அணியாத 300 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட ‘அன்டிஜன்’ பரிசோதனைகளில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

மருதனார்மடம் கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நல்லூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் கொழும்புக்கு சென்று வந்த நிலையில் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 2 பேருக்கு தொற்று 

கிளிநொச்சி – பூநகரி, பள்ளிக்குடா கிராமத்தைச் சேர்ந்த 2 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்ய்பட்டுள்ளது.

குறித்த இருவரும் அண்மையில் கொழும்புக்கு சென்று வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 5 பேருக்கு கொரோனா தொற்று

வவுனியா – பட்டானிச்சூரை சேர்ந்த 5 பேருக்கு கொரோரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதுடன், அதேபகுதியைச் சேர்ந்த கிளிநொச்சி பொறியியல் பீட மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று

மன்னார் – எரிக்கலம்பிட்டி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர் கொழும்புக்கு சென்று வந்த நிலையியே இவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கிழக்கு மகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 264 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 173 பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 34 பேரும், கல்முனை பிராந்தியத்தில் 852 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் 10 பேருக்கு தொற்று

நுவரெலியா – லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றைய தினம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, லிந்துலை -ராணிவத்தை தோட்டம், மவுசாஎல்ல தோட்டம், நோனா தோட்டம், வோல்ட்றீம் தோட்டம், அக்கரப்பத்தனை தொன்பீல்ட் ஆகிய தோட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்து தமது சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், லிந்துலை – தியனலகல தோட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் வட்டவளை ஆடைத்தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.