January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடக்கு – கிழக்கில் அரச சார்பான வெளியீடுகள் அனைத்தும் தமிழ் மொழியில் அமைய வேண்டும்’

இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பிரதேசங்களில் வெளியிடப்படும் அரச சார்பான வெளியீடுகள் அனைத்தும்  தமிழ் மொழியில் அமைய வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் அண்மையில் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டிருந்தமையால் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்றைய தினம் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியிலேயே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு  செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் அவற்றை தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.