February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கு பிணையாளர்களாக வர நாம் தயாராக உள்ளோம்”

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்களை பிணையில் விடுதலை செய்வதென்றால் பிணையாளர்களாக வருவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தயாராகவுள்ளோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விடுதலைக்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தொற்றில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களை பாதுகாக்க வேண்டியதன் நிமித்தம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத்திற்கு முன் வைக்கின்றோம்.

அவர்களை பொது மன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது பிணையிலோ விடுதலை செய்ய வேண்டும். அவர்களை பிணையில் விடுதலை செய்வதென்றால், பிணையாளர்களாக வருவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.