July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘MT New Diamond’ கப்பல் கெப்டனை சந்தேக நபராக குறிப்பிடுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை!

இலங்கையின் கிழக்கு கடலில் தீ விபத்துக்கு உள்ளான எண்ணெய்க் கப்பலான ‘MT New Diamond’ கப்பலின் கெப்டனை சந்தேக நபராக குறிப்பிட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு, இலங்கை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.

2008/35 ஆம் இலக்க கடல் மாசடைவை தடுக்கும் சட்டத்தின் 25 , 26 , 38 மற்றும் 53 ஆம் பிரிவுகளுக்கமைய சட்டமா அதிபரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கப்பலின் உரிமையாளர்களிடம் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இலங்கை கடற்படையினர் மற்றும் கடற்பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்பட்ட செலவீனங்களை ஈடு செய்வதற்காக உரிமை கோரிக்கை கடிதமொன்றை அனுப்பி வைக்கவும் சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.

இதன்படி செலவீன தொகையான 340 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அது தொடர்பான கோரிக்கை கடிதத்தை கப்பல் உரிமையாளர்களின் சட்டத்தரணிகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.