July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நிரந்தர சட்டம் தேவை’

மலையகத் தோட்டத் தொழிலாளர்களை நிரந்தர அடிமைகளாக கருதாது அவர்களின் வாழ்வாதாரத்தையும், கலாசார விழுமியங்களையும் மேம்படுத்தும் நிரந்தர சட்டமொன்றை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து மலையக தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த கொடுப்பனவாக ஆயிரம் ரூபா வழங்குவதாக, அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது.

ஆனால் இன்றுவரை அவர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கவில்லை என்பதை சஜித் பிரேமதாஸ இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதாக கூறிவிட்டு, இன்று அடிப்படை சம்பளம் 750 ரூபாய் எனவும் ஏனைய கொடுப்பனவுகளுடன் ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும் கூறுகின்றனர்.

இதன்படி ஆயிரம் ரூபாய் இன்று 750 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது, தமது அரசியலுக்காக மலையக மக்களை ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்று சஜித் பிரேசமதாஸ அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை  தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்டமொன்றை உருவாக்க வேண்டும் எனவும்  அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல் கொண்டுவரப்படும் சட்டத்தில் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாய் என்பதை குறிப்பிட வேண்டும். அதுவே அவர்களின் உரிமையை பலப்படுத்தும் செயற்பாடாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு சட்டமொன்று கொண்டுவரப்பட்டால் மட்டுமே பெருந்தோட்ட மக்களை அரசியல் தேவைகளுக்காக பகடைக்காய்களாக நகர்த்துவதை தடுக்க முடியும். இந்திய தொழிலாளர்கள் என பெருந்தோட்ட மக்களை சுட்டிகாட்டுவது அவர்களை அவமதிக்கும் செயற்பாடாகும்.

அவர்களும் இலங்கை பிரஜைகள் எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் சகல செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.