2020 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இலங்கை அரசாங்கம் 9,826 பில்லியன் ரூபாவை தேசிய மற்றும் வெளிநாட்டு கடனாக மீளச் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
அதற்கமைய, தேசிய ரீதியில் பெற்றுக்கொண்ட கடன்களுக்கென 5,904 பில்லியன் ரூபாவையும், வெளிநாடுகளிடம் பெற்றுக்கொண்ட கடன்களுக்கென 3,922 பில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வெளிநாட்டு கடன்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் தமது ஆட்சிக் காலத்தில் ரூபாவின் பெறுமதியை நிலையாக கையாள தவறியது. அதன் காரணமாக 2020 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாம் வாங்கிய வெளிநாட்டு கடனுக்கான மேலதிகமாக 1,152 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.
குறித்த காலப்பகுதிகளில் 5,904 பில்லியன் ரூபா தேசிய கடன்களாக செலுத்த வேண்டிய நிலையில், இதில் 2020 ஆம் ஆண்டில் 1,203 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசிய கடன்களுக்காக 2021 ஆம் ஆண்டில் 1,557 பில்லியன் ரூபாவும், 2022 ஆம் ஆண்டில் 1,128 பில்லியன் ரூபாவும், 2023 ஆம் ஆண்டில் 1,120 பில்லியன் ரூபாவும், 2024 ஆம் ஆண்டில் 896 பில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேபோல், 2020 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு கடன்களுக்காக 3,922 பில்லியன் ரூபாவை செலுத்தவேண்டியுள்ளது. அதில் 2020 ஆம் ஆண்டில் 760 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2021 ஆம் ஆண்டில் 726 பில்லியன் ரூபாவும், 2022 ஆம் ஆண்டில் 832 பில்லியன் ரூபாவும், 2023 ஆம் ஆண்டில் 787 பில்லியன் ரூபாவும், 2024 ஆம் ஆண்டில் 817 பில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.