தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் நபர்களை பீசீஆர் அல்லது துரித அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் 2,172 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தமது நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இலங்கையில் எப்பிரதேசத்தில் இருந்தாலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.