January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் பெறப்பட்டது!

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அந்த வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, டெனிஸ்வரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இரண்டு தரப்பினாலும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவும் இதற்கமைய விக்னேஸ்வரன் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மேன்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதால் தாங்களும் அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இரு தரப்பினரினதும் இணக்கப்பாட்டுடன் விக்கேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லாது இத்தோடு முடித்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களினால் அறிவிக்கப்பட்டது. சட்டத்தரணி டெனிஸ்வரன் மாகாண சபை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று இடைக்கால கட்டளையை பிறப்பித்திருந்தது.

எவ்வாறாயினும் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என கூறி, டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார். இதேவேளை பிரதான வழக்கில் டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 அன்று தீர்ப்பளித்திருந்தது.இவ்வாறான நிலைமையில் டெனிஸ்வரன் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்றைய தினத்தில் குறித்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதற்காக விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் , தாம் வழக்கிற்காக செலவழித்த தொகையை செலுத்த வேண்டுமெனவும் அத்துடன் பிரதான வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நீக்கிக் கொள்ள வேண்டுமெனவும் நிபந்தனைகளை விதித்திருந்தனர்.

எவ்வாறாயினும் அவற்றில் முதல் இரண்டு நிபந்தனைகளையும் ஏற்க விக்னேஸ்வரன் தரப்பினர் மறுத்தமையினால் வழக்கு விசாரணையை தொடர நீதிமன்றம் முடிவு செய்திருந்தது.இதற்கமைய இன்றைய தினத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட முன்னர் இருதரப்பும் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய வழக்கை வாபஸ் பெறுவதாக டெனிஸ்வரன் தரப்பு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.