
மட்டக்களப்பு
இலங்கையில் சிறைகளில் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சிவில் அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
யாழ்ப்பாணத்தில்
அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் நல்லூர் ஆதீனத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
இதில் வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
வவுனியாவில்
இதேவேளை வவுனியாவிலும் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யகோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா காமினி மகா வித்தியாலத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘எமது உறவுகளை சிறைகளில் மடியவிடவேண்டாம்’ , ‘தமிழ் அரசியல் கைதிகள் பயங்கவாதிகள் இல்லை’, ‘கைதிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கு’ போன்ற வசனங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சியில்
அரசியல் கைதிகளின் குடும்பங்கள், சிவில் அமைப்புக்கள், வடக்கு மாகாண மக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், பொங்கல் பரிசாக அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் எனவும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
மன்னாரில்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மன்னார் மற்றும் முருங்கன் பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுமத் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ தலைமையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் ஈடுபட்டனர்.
இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, தமிழ் அரசியல் கைதிகள் பயங்கர வாதிகள் இல்லை, எமது உறவுகளை சிறையில் மடிய விட வேண்டாம் உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு எழுதிய மகஜர் ஊடகங்கள் முன்பாக வாசிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பில்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த ஆர்ப்பாட்டம் காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாண பொது மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தன.
‘இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க’ என்னும் தொனிப்பொருளில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல்வாதிகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேந்திரன், சீ. யோகேஸ்வரன், தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த. சுரேஷ் மாநகரசபை மேஜர் ரி. சரவணபவன் மற்றும் வணபிதாக்கள் இந்து குருமார்கள் உட்பட பொதுமக்கள் ஓன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.