‘அபே ஜனபலய’ கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரதன தேரர், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ‘அபே ஜனபலய’ கட்சி நாடு பூராகவும் மொத்தமாக 67,758 வாக்குகளை பெற்று தேசியப் பட்டியல் ஆசனமொன்றை பெற்றுக்கொண்டது.
அந்த ஆசனத்திற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக கட்சிக்குள் நிலவிய குழப்ப நிலைமை காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக யாருடைய பெயரும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
கடந்த வாரத்தில் கட்சிக்குள் அத்துரலியே ரதன தேரரை நியமிக்க இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில், அவரின் பெயரை தேசியப் பட்டியல் உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து இன்றைய தினத்தில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், எதிர்க்கட்சி பக்கத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.
அத்துரலியே ரதன தேரர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்ததுடன், பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீன எம்.பியாக பாராளுமன்றத்தில் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.