ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தயாரித்த வரைபுக்கு தான் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென்று பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டு, பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த கடித விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநா கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்கான வரைபை சுமந்திரன் தன்னிடம் வழங்கும் போது “நாங்கள்” தயாரித்த என்ற பதத்தைப் பாவித்ததாகவே நினைவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் வழங்கிய வரைபைப் படித்துப் பார்க்கின்ற எவருக்கும் ‘வரைபின் நோக்கம் அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் சபையில் முன்னைய தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு மேலும் காலம் வழங்குவதே’ என்பது புலனாகும் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.