யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட உள்நுழைவுத் தடை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக்கொள்ளப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா அறிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில், உள்நுழைவுத் தடை விலக்கிக்கொள்ளப்படுவதாகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு மாணவர்கள் உணவுத் தவிர்ப்பில் ஈடுபடுவதை நிறுத்துவதற்காகவும், மாணவர் நலன் கருதியும் துணைவேந்தருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தரின் இந்த முடிவு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுடன், போராட்டத்தைக் கைவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த முடிவை ஏற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் பின் நின்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று காலை முதல் பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.