
அரசியல் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்து, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை இன்று வரை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மிருசுவில் பகுதியில் பொது மக்களை கொலை செய்த இராணுவ வீரர் மற்றும் ஆயுதங்களுடன் பிடிபட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பௌத்த தேரர் ஆகியோருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் மௌனம் காப்பது தமிழர்களுடைய உணர்வுகளை மதிக்காமையே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை ‘தமிழர் தரப்பாக, ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, தாம், தமது தனிப்பட்ட கருத்துக்களையும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.