இலங்கையின் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மீளத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை மார்ச் மாதத்தில் நடாத்துவதற்கு தேவையான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இதனாலேயே மேல் மாகாணத்திலும் அந்தப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன்கருதி பாடசாலைகளை திறக்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஜனவரி 11 ஆம் திகதி முதல் முன்பள்ளிகள், ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.