January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் இன்று காலை முதல் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டிருப்பதனால் அங்கு பதற்ற நிலை உருவாகியது.

கடந்த வருடம் ஒக்டோபர் 8 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையதாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் ஏற்பட்ட முறுகல் நிலைமை தொடர்பாக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்களே இவ்வாறாக இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்க வேண்டுமென அந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் இந்த போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
எவ்வாறாயினும் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்க மறுத்த மாணவர்கள் இந்த விடயத்தை உயர் அதிகாரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று தெரிவித்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

This slideshow requires JavaScript.