
கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கத்தி மற்றும் அரிவாளுடன் சந்திக்க சென்ற ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு சென்றுள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த போது, அவரை சந்திப்பதற்காக சென்ற ஒருவரை அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது அந்த நபரிடமிருந்து கத்தியொன்றும், அரிவாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சந்தேகத்தில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தான் கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்கு பசளை இடுவதற்காக எடுத்து சென்றதாகவும், திரும்புகையில் கருணா அம்மானை சந்திக்க சென்றதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.