January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

File Photo: cda.gov.lk

வெளிநாடுகளிலிருந்து குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் இவ்வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டில் தேங்காய்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பி.எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தேங்காய்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

கடந்த வருடம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேங்காய்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையினால் தற்போது நாட்டில் தேங்காய்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருகின்றது.

அதன்காரணமாக நாட்டில் தேங்காய்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையிலும், விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையிலும் வெளிநாடுகளிலிருந்து தேங்காய்களை இறக்குமதி செய்யவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பி.எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.