May 24, 2025 18:29:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திலிபனின் நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் அகற்றல்!

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்த அவரின் உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன.

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று முதல் ஆரம்பமாகும் நிலையிலேயே, அவை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றத்தினூடாக தடையுத்தரவை பெற்ற யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று இரவு அந்த இடத்திற்கு சென்று இரவோடு இரவாக திலிபனின் உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகளை அகற்றி அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இடத்தையும் கோப்பாய் பொலிஸார் அகற்றியுள்ளனர்.தியாக தீபம் திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் இருந்த அவர் பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.