இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலேட் விசனம் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் 45ஆவது கூட்டத் தொடரின் தொடக்க அமர்வில் பேசியபோதே அவர் இலங்கை தொடர்பான தனது விசனத்தை வெளியிட்டுள்ளார். “20ஆவது திருத்தம் நிறைவேறினால் அது இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களின் சுதந்திரத்தை மோசமாக பாதிக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய உறுதிமொழிகளிலிருந்து இலங்கை விலகிச்செல்வதாகவும் மிஷேல் பச்சலேட் கவலை வெளியிட்டுள்ளார்.
*”படுகொலைகளில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு கடந்த மார்ச் மாதம் பொதுமன்னிப்பு வழங்கியமை, *போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் நிர்வாகத்தில் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளமை *அவ்வாறான குற்றங்கள் தொடர்பான விசாரணைளை மழுங்கடிப்பதற்காக காவல்துறை மற்றும் நீதித்துறைகளுக்குள் நடந்துவரும் முன்னெடுப்புகள் -இவை எல்லாம் மிகவும் பாதகமான நிலையையே உருவாக்கும்”என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றங்களால் “பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீதான கண்காணிப்பும் அச்சுறுத்தலும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கு இருக்கக்கூடிய அச்சுறுத்தல்களை போக்குவதன் அவசியம் குறித்து இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும் அக்கறை செலுத்தவேண்டும்”-என்றும் மிஷேல் பச்சலேட் கேட்டுக்கொண்டுள்ளார். #இலங்கை#ஐநா#மனிதஉரிமை#போர்க்குற்றம்#தமிழர்கள்#புலம்பெயர்#Humanrights#UNHumanRights#geneva#lka#tamils#SriLanka#20thAmendment#MichelleBachelet