இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினரும் சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தன்னிடமுள்ள 40 இலட்சம் ரூபாய் பணத்தினை பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகளுக்காக தனக்கு கிடைத்த 40 லட்சம் ரூபாய் பணத்தையே அவர் இவ்வாறாக மக்களுக்கு வழங்குவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரது யூடியூப் பக்கத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள ரஞ்சன், மேசை ஒன்றின் மீது 5000 ரூபா பணத் தாள்களை பரப்பி வைத்து, பணம் தேவையானவர்களை தனது செயலாளரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் தனக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளாத நிலையில், தற்போது மொத்தம் 40 இலட்சம் ரூபாவாக அந்தத் தொகை தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த 40 லட்சம் ரூபாயில் தனக்கு சிறிய செலவுகள் உள்ளன. அவை தவிர மிகுதி அனைத்தையும் மனிதாபிமான முறையில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான தனது நண்பர்களுக்கு சொந்தமாக கப்பல்கள், ஹெலிகொப்டர்கள் உள்ள போதும், தன்னிடம் வாடகைக்கு பெறப்பட்ட வேன் ஒன்றே இருப்பதாகவும், ‘வரி செலுத்தாமல் வாகனம் கொள்வனவு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கிய அனுமதி பத்திரம் மூலம் கிடைத்த பணத்தை கலைஞர்களுக்காக வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
“அடுத்த முறை எனக்கு கிடைக்கவுள்ள வாகன கொள்முதல் அனுமதிப்பத்திரம் மூலம் கிடைக்கும் பணத்தினையும் மக்களுக்காக செலவு செய்யவுள்ளேன்.
இப்போது எனக்கு போதுமான பணம் உள்ளது. இன்னும் பணம் சேரும். எனக்கு யூடியூப் தளம் உள்ளது. அதன் மூலம் மாதம் 3 – 4 இலட்சம் ரூபாய் கிடைக்கும். அதையும் மக்களுக்கே வழங்கப்போகிறேன்.
அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள் என்று எனக்கு யாரும் இல்லை. நான் தனியாக இருக்கிறேன். அதனாலேயே இந்தக் காரியத்தை செய்கின்றேன்” எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பணம் தேவையானவர்களை தனது செயலாளரைத் தொடர்பு கொள்ளுமாறும், செயலாளரின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கத்தையும் ரஞ்சன் ராமநாயக்க தனது காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.