January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட சான்றிதழ் வழங்கியதால் அமைதியின்மை

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட வெற்றிச்சான்றிதழ்களை இளைஞர்கள் ஏற்க மறுத்த சம்பவமொன்று வடமாகாணத்தின் கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாகாணத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தின் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு முழுமையாக சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டமையானது இளைஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் நிகழ்வின் இறுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டது.

இந்த செயற்பாடானது ஒரு மனித உரிமை மீறல் செயற்பாடு எனவும், இதனால் மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும், மாகாணங்களில் எந்த மொழியை பிரதானமாகக் கொண்டு மக்கள் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அந்த மொழியின் ஊடாகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இனி இவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெறக்கூடாது எனவும் இளைஞர்கள் இதன்போது தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

மேலும், இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மன்ற உதவிப் பணிப்பாளர் தபேந்திரன் குறிப்பிடுகையில்,

குறித்த சான்றிதழ் அவசரமாக இளைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதால் நேற்றைய தினம் கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டது.

இந்த சான்றிதழை இங்கேயே அச்சிட்டு வழங்கியிருக்க முடியும். ஆனால் தேசிய அங்கீகாரத்தை பெறும் வகையில் தேசிய சேவைகள் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியமானவர்களின் ஒப்பத்துடன் இந்த சான்றிதழை வழங்க வேண்டும் என்பதற்காகவே அங்கிருந்து அனுப்பப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சிங்கள மொழி எழுதுவினைஞர்கள் மாத்திரமே தலைமை காரியாலயத்தில் கடமையில் இருந்துள்ளதால், தமிழ் ஊழியர்களை அழைக்க முடியாது போனமையாலுமே இவ்வாறான சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மாகாண உதவி பணிப்பாளர் மற்றும் மாவட்ட உதவி பணிப்பாளர்களின் கையொப்பத்துடன் அவர்களிற்கு தேவையான மொழியில் சான்றிதழ்களை வழங்குமாறு தலைமை காரியாலயத்திலிருந்து அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.