இலங்கையின் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த நாட்டு மருத்துவர் தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு மூலிகைப் பாணி தொடர்பான முழுமையான மருத்துவ சோதனைகள் முடிவடையும் வரையில் அதனை ஒரு மருந்தாக கருத முடியாது என சுகாதார அமைச்சின் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்புப் பாணியை ஆய்வு செய்யவென சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் தலைவரான மருத்துவ ஆலோசகர் சேனக பிலிப்பிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனாவை தடுப்பதற்காகவென தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தம்மிக பண்டாரவின் ஆயுர்வேத கொரோனா தடுப்புப் பாணியை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த கலவையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஒரு முழுமையான மருத்துவ சோதனை நடத்தப்படும் வரை இதனை ஒரு மருந்தாக கருத முடியாது என்று சேனக பிலிப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் நோய்த் தடுப்புப் பாணிக்கு ஆயர்வேத திணைக்களத்தின் மருந்தியல் பிரிவின் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும், கொரோனா தடுப்புக்கான மருந்து என்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை என இவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கேகாலை மாவட்டத்தில் இவ் பாணியை பருகிய 5 வயது குழந்தை உட்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.