July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் 68,000 இலங்கையர்கள் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் காத்திருப்பு

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள சுமார் 68,000 இலங்கையர்கள் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் முடக்கம், தனிமைப்படுத்தல் மற்றும் விமான சேவைகள் இடைநிறுத்தம் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், இலங்கைத் தூதரகங்களின் மூலமாக கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 137 நாடுகளிலிருந்து சுமார் 60,470 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் சுமார் 40,000 பேர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் ஏனையவர்கள் ஐரோப்பியா, ஆபிரிக்கா, ஆசியா, மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மேலும் 68,000 பேர் வரையிலான இலங்கையர்கள் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் காத்திருப்பதாகவும், இவர்களை அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 9 ஆம் திகதிக்குள் சென்னை, மெல்போர்ன், குவைத், டோஹா, டொரென்டோ, சைப்ரஸ் மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 1,400 பேரை நாட்டுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.