எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தனது ‘தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி’ கட்சி போட்டியிடுமென்று முன்னாள் பாராளுன்ற உறுப்பினரான, கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவுள்ளோம். அதற்கான வேட்பாளர்களையும் தெரிவு செய்துள்ளோம். ஆனால் தேசியக் கட்சியுடன் அல்லாமல், தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவே எதிர்பார்க்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் தமிழ் கட்சிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அனைவரையும் ஒன்றாக இணைத்து போட்டியிடுவது என்ற முடிவிலேயே இருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவீர்களா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளதாவது,
”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். நான் அவர்களின் தவறுகளை திருத்த வேண்டுமென்றே விமர்சிக்கின்றேன். ஆனால் அவர்களுடனான உறவு இப்போதும் தொடர்கிறது. எதிர்காலத்தில் அவர்களுடன் பேசுவதற்கும் தயராக இருக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.