தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் சந்தித்துபேச்சு நடத்தியுள்ளார்.
அம்பாறை நாவிதன்வெளியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இன்று(14) இந்த சந்திப்பு இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள், அரசியல் நிலமைகள் தொடர்பாக இதன் போது ஒரு மணிநேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு நடைபெற முன்னதாக அப்பகுதியில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், ‘”அம்பாறை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வழங்கப்பட்டமை தொடர்பில் எமது கட்சிக்கு நன்றி தெரிவித்தார். எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் இடம்பெறவுள்ள நிலைமைகளை அறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தார்.
இவர்களுடன் இணைந்து எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு எமக்கு கடப்பாடு உள்ளது. நம்பிக்கை தரக்கூடிய சந்திப்பாக இக்கலந்துரையாடல் இருந்தது. ஆரோக்கியமாக இருந்த சந்திப்பு எமது மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் என நம்புகின்றேன்” என்றார்.