November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதி வழங்க முடியும்’

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதி வழங்க முடியும் என இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மருத்துவர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் எரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு உயிரிழப்பவர்களின் சடலங்கள் எரிக்கப்படக்கூடாது, புதைக்கப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் நிலவிய பல்வேறு கருத்து வேறுபாடுகளை கருத்தில் கொண்டு குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மருத்துவர்கள் சங்கத்தினால் விஷேட ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் விஞ்ஞான ரீதியான தகவல்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வின் ஊடாக சடலங்களை புதைப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் மருத்துவர்கள் சங்கத்தினால் ஏழு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில்,

1.கொரோனா தொற்று சுவாசக் குழாய் வழியாக மாத்திரமே ஏற்படுவதால், குறித்த வைரஸ் உயிரணுக்களில் மட்டுமே பரவும்.

2.​வைரஸ் ஒரு உயிருள்ள கலத்தில் மட்டுமே வளர முடியும் என்பதால், உயிரற்ற உடலில் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உயிர்வாழ முடியாது.

3.பிரேத பரிசோதனையில் பி.சி.ஆர் முடிவுகள் நேர்மறையானவை என்றாலும், சடலங்களில் இருந்து வைரஸ் பரவுகிறது என்பதை திட்டவட்டமாக கூற முடியாது.

4.புதைக்கப்படும் சடலங்களினால் ஏற்படும் நீர் மாசுபாட்டை விட தொற்றாளர் ஒருவரினால் வெளியேற்றப்படும் கழிவுகளினால் நீர் கடுமையாக மாசுபடக்கூடும்.

5.நிலத்தடி நீரில் வைரஸ் துகள்கள் பல சந்தர்ப்பங்களில் பதிவாகியுள்ள போதும், குறித்த வைரஸினால் நோய்த்தொற்றுகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.இதற்கு முன்னர் பதிவான இன்புளுவென்சா மற்றும் சார்ஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆழமான ஆய்வுகளில் கூட அவ்வாறான தொற்று நோய்கள் குறித்து எதுவும் பதிவாகவில்லை.

6. டென்மார்க்கில் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட கீரிகள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டமைக்கான காரணம் நீர் மாசடைவதன் காரணமாக இல்லை எனவும் உக்கும் கீரிகளின் உடல்களில் இருந்து நைட்ரிஜன் கழிவுகள் சூழலில் மற்றும் நீருடன் கலப்பதனாலாகும்.

7.நீரினால் பரவும் கொலோரா போன்ற கொடிய நோய்களில் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கூட அடக்கம் செய்யப்படுகின்றன.

குறித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே  கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதி வழங்க முடியும் என மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.