November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசியலமைப்பு தொடர்பில் மக்களிடம் கருத்துக் கேட்பதாக அரசாங்கம் பாசாங்கு செய்கிறது’

இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு சார்பான அரசியலமைப்பு வரைபை ஏற்கனவே தயாரித்துவிட்டு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாக அரசாங்கம் பாசாங்கு செய்துகொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இப்படி பாசாங்கு செய்துவிட்டு இறுதியில் ஏற்கனவே தயாரித்த வரைபை வெளியிடுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பை தயாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எல்லோரினதும் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே நாம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினோம் என்று உலகத்திற்கு கூறுவதற்கு அரசாங்கம் முயன்று வருவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு வகைப்பாடுகளையும் பன்மைத்துவத்தையும் கருத்திற்கொண்டதான ஒரு அரசியல் யாப்பு வரைபு கொண்டுவரப்படும் என்று நம்பவில்லை எனவும், பெரும்பான்மையினருக்கு மட்டும் சார்பான ஒரு அரசியல் யாப்பையே இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியல் வரைபை தயாரிக்கும் செயற்பாட்டில் கலந்துகொள்ளவில்லை என்ற அவச்சொல் தமக்கு வராதிருப்பதற்காகவே தமது கருத்துக்களை முன்வைப்பதாகவும் குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் முன்னர் செய்த தவறுகளை இம்முறையும் செய்யாமல், புதிய முயற்சியில் நாட்டின் சகல இன மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அரசியல் அபிலாசைகளையும் நிறைவு செய்யும் விதத்தில் ஒரு தகுந்த அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.