February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பொம்மைவெளி மக்களை சந்தித்தார் அமைச்சர் இந்திக்க அனுருத்த!

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்புத் திட்டத்தைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்குப் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த பகுதிக்குச் சென்று பிரச்சனைகளை ஆராயுமாறு பிரதமர் பிறப்பித்த உத்தரவின்படி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்று குறித்த பகுதிக்கு நேரில் மக்களை சந்தித்துள்ளார்.

பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது எனவும், தமக்கான வீடமைப்புத் திட்டத்தை அமைத்துத் தர உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, சிறுவனொருவன், “மகிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டித் தரமாட்டிங்களா?” என்ற பதாகையொன்றை ஏந்தியிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.இந்தப் புகைப்படத்தை நேற்றுப் பார்வையிட்ட பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, குறித்த பிரச்சனை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு, பொம்மை மக்களை சந்தித்து பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனும் இதன்போது உடனிருந்தார்.