இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் மன்ற (ICJ) விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பவர்கள் அரசியல் லாபங்களுக்காக செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை ஊடக அமையத்தில் நடைபெற்ற சமகால அரசியல் தொடர்பான விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் கூடவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சகல தமிழ்த் தரப்பினருடனும் இணைந்து முன்மொழிவொன்றை முன்வைக்கவுள்ளதாகவும், இது தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சில அரசியல் தரப்பினர் தமது அரசியல் லாபங்களுக்காக இவ்விடயத்தில் செயற்பட முயல்கின்றதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் வாக்களிக்கவுள்ளன. இதில் 24 நாடுகளின் ஆதரவினைத் தாம் பெற்றால் மாத்திரமே இலங்கைக்கு எதிரான பிரேரணையை நகர்த்த முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சிலர் கூறுவதைப் போன்று இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதென்றால் இன்னுமொரு நாடு பிரேரணையை முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இனியும் ஏதேனும் நாடு முன்வந்து பிரேரணை சமர்ப்பித்து, நடவடிக்கை எடுக்கும் என்பதை தாம் நம்பவில்லை என்றும், சர்வதேச விசாரணைகள் தொடர்பாக சிலர் குறுகிய அரசியல் லாபத்திற்காகவே கருத்துத் தெரிவிக்கின்றனர் எனவும் சாணக்கியன் கூறியுள்ளார்.