July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வட மாகாணத்தில் பொதுமக்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுப்படுத்துவதே பொலிஸாரின் நோக்கம்’

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்று வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ண தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் அடிக்கடி இடம்பெறும் குற்றச்செயல்கள் குறித்து மக்களை விழிப்பூட்டும் வகையில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பொது மக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதின் ஊடாக குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தை விட குற்றச்செயல்களை கட்டுப்படுத்திக்கொள்வதற்குரிய மேலதிக வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதற்காகவே புதிய வேலைத்திட்டங்கள் மூலம் பொது மக்களை நல்வழிப்படுத்தி, குற்றச்செயல்களை தடுக்க முயற்சிப்பதன் நோக்கமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் காலத்திலும் உலக நியதிக்கு இணங்க வட பகுதியிலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்குரிய கட்டுப்பாடுகள், நடைமுறைகளை பின்பற்றி பொது மக்களை செயற்படுத்துவதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.

பிரதேசத்தில் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, பொது மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்துவதே பொலிஸாரின் எதிர்பார்ப்பாகும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.