கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து உற்பத்தி மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல்கள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி ஆகிய இரு கொவிட் 19 தடுப்பூசிகளை இலங்கை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இறக்குமதி தொடர்பாக அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கும் ரஷ்ய தடுப்பூசியுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கும் இடையில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 12 அத்தியாவசிய மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படும் மருந்து வகைகளில் 90 சதவீதமானவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.