இலங்கையில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி நிலைமை காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
பசுமை மீட்புப் பாசறை எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டதாகவும், தேர்தல் பிற்போடப்பட்ட பெருமை தற்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்களையே சாரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் கடந்த அரசாங்கத்தில் மாகாண சபை தேர்தலை நடத்தாமல் நான்கு ஆண்டுகளாக பிற்போட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து சிந்தித்து வருவதாகவும், கொரோனா நெருக்கடி உள்ளிட்ட அசாதாரன சூழ்நிலைகள் காரணமாகவே அதனை நடத்த முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.