இலங்கை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மூட நம்பிக்கைகளை தவிர்த்து, விஞ்ஞான முறைகளையே பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளரும் சுற்றாடல் அமைச்சின் செயலாளருமான வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் விஞ்ஞான ரீதியான புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இலங்கையில் சிலர் மூட நம்பிக்கைகளைப் பின்பற்றி கொரோனாவில் இருந்து பாதுகாப்புப் பெற முயற்சிப்பதாகவும் இக்கொடிய தொற்று நோயிலிருந்து விடுபட விஞ்ஞான முறைகளைப் பின்பற்றுவதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த 70 வீதமான மக்களுக்கேனும் தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.