
“இலங்கை இராணுவம் படுகொலைகளில் ஈடுபடவில்லை, போர்க் குற்றங்களை இழைக்கவில்லை, எனவே நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்” என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
‘இராணுவத்தினருக்கு எதிராக அடுத்துவரும் காலப்பகுதியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம். இதற்கு சில அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரை மையப்படுத்தியே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்:
“2009ஆம் ஆண்டு முதல் எமது இராணுவத்துக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாம் படுகொலைகளில் ஈடுபட்ட இராணுவம் கிடையாது. போர்க் குற்றங்களை இழைக்கவில்லை. நாம் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள். எமக்கு எந்தவொரு அச்சமும் இல்லை.
அதேவேளை, பிரிவினைவாதத்துக்கும் அடிப்படைவாதத்துக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக்கூடும் என அண்மையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அவ்வாறானதொரு நிலைமை உருவாகுவதற்கு இங்கு இடமளிக்கமாட்டோம்.
ஒரு காலத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவர் இருந்தார். அவரும் ஆயுதம் ஏந்தி நாட்டு மக்களை இல்லாதொழிக்க முற்பட்டார். ஆனால், அந்தத் திட்டம் எடுபடவில்லை.
ஆகவே, தீவிரவாதம், பயங்கரவாதம், கடும்போக்குவாதம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களின் திட்டம் நிறைவேறுவதற்கு இடமளிக்கப்படாது. அதனைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்” என்றார்.