மேயருக்கு என ஒதுக்கப்படும் வாகனம் உள்ளிட்ட எந்தவொரு வரப்பிரசாதங்களையும் அனுபவிக்கப் போவதில்லை என்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், யாழ். மாநகர சபையிலும் நல்லூர் பிரதேச சபையிலும் சிறப்பான ஆட்சியொன்றை அமைப்பதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அந்த கடமையை சரிவர செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாநகரசபை மேயராக நான் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் உழியம் எதுவும் பெறாது சேவையாற்றுவேன் என்றும், எந்தவொரு வரப்பிரசாதங்களையும் அனுபவிக்கப்போவதில்லை என்றும் தேர்தல் காலத்தில் எனது தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த வகையில் தற்போது மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், என்னுடைய குறித்த வாக்குறுதிகளிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை.
இதேவேளை, முன்னாள் முதல்வரால் கொள்வனவு செய்யப்பட்ட ஆடம்பர மடிக் கணினியை விற்பனை செய்வது தொடர்பில் ஆணையாளரிடம் வினாவியுள்ளேன்.
எனவே அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மக்களின் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார்.