யாழ். மாநகர சபையின் புதிய மேயர் வி.மணிவண்ணனை ஆதரித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையிலோ அல்லது நல்லூர் பிரதேச சபையிலோ வேட்பாளரை முன்னிறுத்தி போட்டியிடுவதில்லை என்றும், யாழ். மாநகர சபையில் ஏற்கனவே மேயராக இருந்த ஆனல்ட்டுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும், அவர் தவிர்ந்த வேறொருவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேரிக்கின்ற பட்சத்தில் அவருக்கு ஆதரவளிப்பது என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்திருந்ததாக சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று நல்லூர் பிரதேச சபையிலும் ஏற்கனவே இருந்த தவிசாளர் தவிர்ந்த வேறொருவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரேரித்தால் அவருக்கு ஆதரவளிப்பது என்றும், இல்லாவிட்டால் ஆதரவளிப்பதில்லை என்றும் தீர்மானிக்கபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் எமது கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக யாழ். மாநகர சபையில் வி. மணிவண்ணன் மேயராவதற்கு தங்களுடைய காட்சி உறுப்பினர்கள் ஆறு பேர் ஆதரவளித்துள்ளதாகவும், அத்துடன் நுல்லூர் பிரதேச சபையிலும் 3 உறுப்பினர்கள் அவ்வாறு வாக்களித்துள்ளதாகவும் சுகாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே கட்சியின் தீர்மானங்களை மீறி செயற்பட்டமைக்காக இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.