இலங்கையில் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் இந்த வருடத்தில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டில் பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் சர்வதேச நாடுகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இன்டர்போல் எனப்படும் சர்வதேச குற்றவியல் பொலிஸ் பிரிவினர் மூலம் 18 சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை இந்த வருடம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.