November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் இலங்கையில் புதிய வகை வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை!

உலக நாடுகளில் புதிய கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமை மோசமாக பரவி வருகின்ற நிலையில், இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதால் இங்கும் அந்த வைரஸ் பரவல் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டைப் போலவே 2021 ஆம் ஆண்டும் கொவிட் -19 வைரஸ் நெருக்கடியை சந்திக்க வேண்டிய ஆண்டாக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனவே நாமும் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு எமது நாட்டில் வைரஸ் பரவல் நிலைமைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். குறிப்பாக மக்களின் அநாவசிய செயற்பாடுகள் மேலும் சில காலத்திற்கு கட்டுப்படுத்தப்படவேண்டும் எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் சுற்றுலாத்துறை செயற்பாடுகள் மார்ச் மாதம் வரையிலேனும் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் உக்ரைன் நாட்டுப் பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதும் கண்டறியபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் உக்ரைன் நாட்டை பொறுத்தவரையில் உலகில் கொரோனா வைரஸ் பரவல் கொண்ட நாடுகளில் 16ஆவது இடத்தில் உள்ள நாடாகும் என்றும், அவ்வாறு இருக்கையில் அந்த நாட்டு பயணிகளை எமது நாட்டிற்குள் அனுமதிப்பது முட்டாள்தனமான செயற்பாடு என்றே வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

இப்போது கொரோனா வைரஸ் தனது தன்மையில் இருந்து மாற்றம் பெற்று அதிக வீரியம் கொண்ட வைரஸாக மாற்றம் பெற்றுள்ளது.

இந் நிலையிலும் வெளிநாட்டவரை இலங்கைக்குள் சுற்றுலா பயணிகளாக அனுமதித்தால் இலங்கையில் புதியவகை வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.