நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறலை வரையறுக்கும் உத்தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் காலத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கத்தினை கருத்தில் கொண்டு வெளிநாட்டு நாணய இருப்பு நிலையை பாதுகாக்கும் நோக்கில் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, 2017 ஆம் ஆண்டு இலக்கம் 12 இன் கீழான வெளிநாட்டு செலாவணி சட்டத்தில் 29 ஆம் சரத்தின் கீழ் தொடர்புடைய விதிமுறைகளுக்கு அமைவாக 2020 ஏப்ரல் 2 ஆம் திகதிக்குறிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் முதல் மூன்று மாதங்களுக்கு இவ் வரையறைகளைப் பிரகடனப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் பரிந்துரைகளுக்கு அமைய இவ் வர்த்தமானி அறிவிப்பின் கால எல்லை மீண்டும் 2020 ஜுலை மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டது.
இதற்கமைய, 2021 ஜனவரி 2 முடிவடையவுள்ள நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறலை வரையறுப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பின் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ் வர்த்தமானியில், இலங்கையில் வசிக்கும் நபர்களால் வெளிநாட்டு முதலீட்டுக் கணக்குகள் மூலம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வெளிநாட்டு பணம் அனுப்புவதற்கு வழங்கப்பட்ட பொது அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் வசிக்கும் நபர்கள் வைத்திருக்கும் வணிக வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (பி.எஃப்.சி.ஏக்கள்) அல்லது தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (பி.எஃப்.சி.ஏக்கள்) மூலமாகவும் பணம் அனுப்புவதற்கான அனுமதி அதிகபட்சம் 20,000 டொலராக வரையறுக்கப்பட்டுள்ளது.