பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட அரசியல் தீர்வோடு தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஐநா மனித உரிமைகள் பேரவை ஓய்வெடுக்கக் கூடாது என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தின் 1414 ஆவது நாளான இன்று, அங்கு நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு கூறினர்.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் முக்கியமான பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக பலம் வாய்ந்த நாடுகளையும் ஐநாவையும் வலியுறுத்த கோரி மின்னஞ்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இலங்கையின் வடகிழக்கில் தங்கள் பண்டைய தமிழ் தாயகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வைத் தீர்மானிக்க ஐநா நிர்வாகத்தின் கீழ் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
எங்கள் போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைத் தேடும் பெற்றோரை இழக்கிறோம் என்பது போன்ற எங்கள் சுருக்கமான துன்பங்களையும் நாங்கள் மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம் என்றும் காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.