July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா தீர்மானம்: சுமந்திரனின் முன்மொழிவை ஏற்காத விக்னேஸ்வரனின் யோசனைகள் என்ன?

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், அநீதிகள் என்பன தொடர்பில் நீதியான – பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடங்கிய முன்மொழிவுகளை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் முன்வைக்கவுள்ளது.

அதற்கு முன்னதாக, அந்த முன்மொழிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார்.

“இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்”

ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தனது பார்வைக்காக அனுப்பிவைத்த முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்குச் சமர்ப்பிப்பதற்காக என்று கூறி சுமந்திரன் ஒரு முன்மொழிவை எனக்கு அனுப்பியிருந்தார். எனது பார்வையில் அது இலங்கை அரசுக்கு மேலும் கால நீடிப்பு வழங்கும் ஒரு முன்மொழிவாகவே உள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே 6 வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இனிமேலும் அப்படி வழங்கப்படக்கூடாது.

ஆகவே, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் சமர்ப்பிப்பதற்காக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தயாரித்துள்ள முன்மொழிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால், ஐநா மனித உரிமைகள் பேரவையில் அதனை ஒரு பொதுவான முன்மொழிவாகச் சமர்ப்பிக்க முடியும்.

அந்த முன்மொழிவில் முக்கியமான சில விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன;

* ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு 6 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. இனிமேல் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது.

* இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

* இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சிரியா, மியன்மார் போன்ற நாடுகளில் அமைக்கப்பட்ட விசேட நிபுணர் குழு போன்றதொரு செயற்பாட்டை ஐநா இலங்கையிலும் நிறுவ வேண்டும்.

* ஐநா சிறப்பு கண்காணிப்பாளர் ஒருவரை இலங்கையில் நியமிக்க வேண்டும்.

மேற்படி கோரிக்கைகளுடன் மேலும் பல விடயங்களை எமது முன்மொழிவில் உள்ளடக்கியுள்ளளோம்” என்று கூறியுள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன்.