January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமந்திரனின் குற்றச்சாட்டை நிராகரித்த மாவை சேனாதிராசா

யாழ். மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்தமைக்கு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் செயற்பாடுகளே காரணமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள மாவை சேனாதிராசா, இது தொடர்பில் விரைவில் சுமந்திரனுக்கு தான் பதிலளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சுமத்துவது ஒன்றும் புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் அதாவது பாரர்ளுமன்றத் தேர்தல் முடிந்ததும் ஊடக சந்திப்பை நடாத்தி தலைவர், செயலாளர் பற்றி பேசியிருக்கின்றார்.

இந்த விடயங்கள் தொடர்பில் செயற்குழுவைக் கூட்டி பேச வேண்டும். அதேநேரம் அதற்கு நான் பதிலளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் பதிலளிக்க வேண்டும்.

ஆனால் இன்றைய ஒரு பத்திரிகையில் ஆசிரியர் என்னை இழிவுபடுத்தி எழுதியதால் அதற்கு நான் பதிலளித்திருக்கிறேன்.

இந்தக் குற்றச்சாட்டுக் கடிதம் தொடர்பில் எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின்னர் அறிக்கை கொடுப்பேன். ஏனெனில் வருடத்தின் முதல்நாளில் அரசியல் குழப்பங்கள், குற்றச்சாட்டுக்களை சுமத்தி பதில் கொடுக்க நான் விரும்பவில்லை. அதற்கு எனது மனமும் இடமளிக்கவில்லை.

இதேவேளை மாநகர சபை முதல்வர் விடயத்தில் நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்ற குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறேன். கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் ஆராய்ந்து தான் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனை தான் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.

மேலும் ஆனோல்ட்டை விட வேறு ஒருவரை போட வேண்டாமென சொல்லியிருந்தால் பரவாயில்லை. பெரும்பாலானவர்கள் ஆனோல்ட்டை என்றே கூறியிருந்தனர். அத்தோடு அவரையே தெரிவு செய்து ஆதரிப்பதென அனைவரும் தீர்மானமாக எடுத்திருந்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.