
இலங்கையில் ஜனவரி மாதம் முதல் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று கொழும்பில் ராஜகிரியவில் உள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், இதற்கான புதிய வரையறைகளை நிர்ணயித்து வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த வருடம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அதற்காக 4,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்றையும், தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகளுடனான கலந்துரையாடல் ஒன்றையும் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.