October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பள பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சில் இன்று, முதலாளிமார் சம்மேளனத்திற்கும் மற்றும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில காரணங்களால் அந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும்  7 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்  உப செயலாளரும், சர்வதேச விவகாரங்கள் மற்றும் தொழிலுறவுகளுக்கு பொறுப்பானவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

கடந்த பேச்சுவார்த்தையில் கம்பனிகள் தங்களது பணிப்பாளர் குழாம் மற்றும் தலைவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் 31 ஆம் திகதி கூடுவதாக கூறி இருந்தனர். எனினும், காலம் போதாமையினால் முதலாளிமார் சம்மேளனம், தொழில் அமைச்சரிடம் 7 ஆம் திகதி வரை பேச்சுவார்த்தையை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக பாரத் அருள்சாமி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இன்றைய தினத்தில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் காணொளி ஊடாக கலந்து கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இ.தொ.காவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் தான் இன்றைய தினம் தொழில் அமைச்சில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் முன்னெடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் பாரத் அருள்சாமி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த நவம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனவரி மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.