November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“திலீபன் சுகதேகியாக இருந்தே உயிர்நீத்தார்”: பாதுகாப்புச் செயலாளருக்கு சிவஞானம் பதிலடி!

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன கூறுவது போல் திலீபன் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை எனவும், உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல் நாள் கூட அவரை தான் சந்தித்து பேசியதாகவும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் ( இயற்பெயர்: இராசையா பார்த்திபன்) 23 வயதில் -1987ம் ஆண்டு செப்டெம்பர் 26ம் திகதி நல்லூர் முன்றலில் 12 நாட்கள் – உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிர்நீத்தார்.

ஆனால் திலீபன் உண்ணாவிரதத்தால் மரணமடையவில்லை என்றும் நோயின் காரணமாகவே மரணமடைந்ததாகவும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அன்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சீ.வி.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்த கருத்து ஒரு ஆச்சரியமான கருத்து, திலீபன் போராட்ட வேள்வியிலே ஆகுதியாகி 32 வருடங்களுக்குப் பிறகு, கமால் குணரட்ன பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தது போல் சொல்லியிருப்பது ஆச்சரியமானது.துரதிஸ்டவசமாக எங்கள் மத்தியிலும், திலீபனை தெரியாதவர்கள், அவருடைய வாழ்க்கை வரலாற்றை நேரடியாக தெரியாதவர்கள் பல கருத்துக்களை சொல்லுவதை துன்பியலாகவே நான் பார்க்கின்றேன்.

“செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பிரச்சனைகள் தீவிரமடைந்த நாளில் காலையில் சென்று இந்திய உயர்ஸ்தானிகர் திக்சிட்டை சந்தித்த பிறகு -யாழ் தேவியிலே வந்து என்னுடைய நண்பனாக இருக்கக் கூடிய சிவசுப்ரமணியத்தை அழைத்துக்கொண்டு – திலீபனது அலுவலகத்திற்கு சென்று அவருடன் நள்ளிரவு வரை பேசியவன் நான்”-என்றார் சிவஞானம்.“அவன் மிக தெளிவான சுகதேகியாக இருந்தான், தன்னுடைய தீர்மானத்திலே மிக தெளிவானவனாக இருந்தான். இந்த உண்ணாவிரதம் தொடர்பாக இன்னும் பேசலாம் என்ற போது, இல்லை நான் தெளிவாக இருக்கின்றேன் என்று சொல்லி அடுத்தநாள் உண்ணாவிரதம் இருந்தவன் அவன். நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை. ஏன் என்றால் அவனுடைய அரசியல் செயல்பாடு முழுமையாக ஓர் அளவுக்கு எனக்கு தெரிந்திருந்தது. அவன் மக்களோடு பழகிய விதம் தெரிந்திருந்தது.

ஆகவே நோய்வாய்பட்ட அவனை தேசியத்தலைவர் உண்ணாவிரம் இருக்க சொன்னார் என்று சொல்வது தவறானது. இயக்க வரலாற்றிலே, விடுதலை வேள்வியிலே ஆகுதியாக ஆயத்தமாக இருக்கின்ற எத்தனையோ பேரிலே இவனும் ஒருத்தனாக இருந்தான். ஆகவேதான் அவன் தெரிவுசெய்யப்பட்டான். அவன் நோய்வாய் பட்டதாலேதான் தலைவர் தெரிவு செய்ததாக அர்த்தமில்லை.கமல் குணரத்ன போன்ற பொறுப்பான பதவிகளிலே இருப்பவர்கள் 32 வருடங்களுக்கு பிறகு இப்படியான ஒரு கருத்தை சொல்வது மிகவும் கவலைக்குரியது.

அவருடைய தரத்துக்கும், அவர் இருக்கின்ற நிலைக்கும் இவ்வாறாக பேசுவது பொதுத்தமில்லை”என்றும் கூறினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சிவஞானம்.