மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு வீடுவீடாக உணவுப் பொருட்களை வழங்குவதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் கொரோனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தொழில் வாய்ப்புகளை இழந்தும் தொழிலை முன்னெடுக்கமுடியாமலும் பெரும்பான்மையானோர் வறுமையில் வாடுகின்றனர், வசதியுள்ளோரும் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் வறுமையில் வாட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக இரா.துரைரெத்தினம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட அபிவிருத்திக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களையும், சமூர்த்தி ஊடான கொடுப்பனவுகளையும், களஞ்சிப்படுத்தப்பட்டுள்ள நெல்லை அரிசியாக்கியும் வறுமையில் வாடுகின்ற அனைவருக்கும் வீடுவீடாக வழங்குவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு விரைந்து செயற்பட வேண்டும். என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.