
பழுதடைந்ததன் காரணமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டு, டிப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 273 பேருந்துகளை மீளபுதுப்பித்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளை போக்குவரத்தில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களின் நலன் கருதி கிராமப்புறங்களில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் 107 டிப்போக்களில் இருந்த குறித்த 273 பேருந்துகளும் 115 மில்லியன் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேயின் வழிகாட்டுதலின் கீழ் வாகன ஒழுங்கு முறை, பேருந்துப் போக்குவரத்துச் சேவைகள், புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால் குறித்த நிகழ்த்திச் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபை, இலங்கை பொறியியல் நிறுவனம் மற்றும் இலங்கை பொதுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஆதரவோடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இவ்வாறாக புதுப்பிக்கப்பட்ட பஸ்களை சேவைகளில் ஈடுபடுத்துவதற்கான ஆரம்ப நிகழ்வானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.